தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆண்டுதோறும் 18,000 சாலை விபத்துகள்: இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம்

2 mins read
6f6a903a-60a9-4837-9d8a-8928d65ca8d0
விபத்துகளில் உயிரிழப்போரில் 60 விழுக்காட்டினர் 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) கேள்வி நேரத்தின்போது, சாலை விபத்துகள் குறித்து அவர் பேசுகையில், “இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சிக்கி 1.78 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “விபத்துகளில் உயிரிழப்போரில் 60 விழுக்காட்டினர் 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள்.

“வாகன ஓட்டுநர்களில் சிலர் சட்டத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. இருசக்கர வாகன ஓட்டுநர்களில் பலர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதில்லை.

“மேலும் சிலர் சிவப்பு சமிக்ஞையை மதிப்பதே இல்லை.

“நான் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றபோது சாலை விபத்துகளின் எண்ணிக்கையை 50 விழுக்காடு, அதாவது பாதியாகக் குறைக்கத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை எடுத்தேன்.

“ஆனால், விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை என்பதை தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறேன்.

“சாலை விபத்துகள் தொடர்பாக அனைத்துலகக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது நான் எனது முகத்தை மறைத்துக்கொள்ளும் நிலையே உள்ளது,” என்றார் நிதின் கட்கரி.

பின்னர், மாநில வாரியாக விபத்துகளின் எண்ணிக்கையை அவர் பட்டியலிட்டார்.

ஒட்டுமொத்த சாலை விபத்து மரணங்களில் உத்தரப் பிரதேச மாநிலம் 13.7 விழுக்காட்டுடன் (23,000) முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாடு 10.5 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் சராசரியாக 18,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

மகாராஷ்டிரா (15,000), மத்தியப் பிரதேசம் (13,000) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

நகரங்களைப் பொறுத்தவரை டெல்லி 1,400 பேருடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (915), ஜெய்ப்பூர் (850) ஆகிய நகரங்கள் 2 மற்றும் 3ஆம் இடங்களில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்