கேரளா: கேரளாவில் தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை 60 விழுக்காடு உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து முக்கிய விவரத்தை கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகையில், “தனியார் மருத்துவமனை ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான வரைவு அறிக்கை, இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும்,” என்று அறிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையைத் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால், மருத்துவமனை நிர்வாகங்கள் இதற்கு உடன்படவில்லை. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், 1948ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் அரசு நேரடியாகத் தலையிட்டு இந்த அறிக்கையை வெளியிடுகிறது.
தற்போது வழங்கப்படும் ஊதியம் 2013ஆம் ஆண்டின் அடிப்படையில் உள்ளது. தற்போதைய விலைவாசி உயர்வைச் சமாளிக்க இது போதுமானதாக இல்லை என்பதால், ஊதியத்தை உயர்த்துவது அவசியம் என்று அரசு கருதுகிறது.
“ஊழியர்களுக்கு நியாயமான வருமானத்தை உறுதி செய்வது அரசின் கடமை. இந்த ஊதிய உயர்வு மருத்துவமனை நிர்வாகங்களுக்குப் பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தாது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

