தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

6,000 கி.மீ. பொருளாதார வழித்தடம்: இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை

2 mins read
1f3499ca-bc2d-4a0e-a065-6c805a6b4787
இந்தியப் பிரதமர் மோடியுடன், கிரேக்க நாட்டுப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கிரேக்க நாட்டுப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ்ஸுடன் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தை குறித்து மோடி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கிரேக்க நாட்டுப் பிரதமர் கிரியாகோஸுடன் தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து உறுதி மேற்கொண்டோம். கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு, வர்த்தகம் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்று அந்தப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘இந்தியா- மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின்படி இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றரசு நாடுகள், சவூதி அரேபியா, இஸ்ரேல், கிரேக்கம் நாடுகளில் கடல், ரயில், சாலைவழியாக 6,000 கி.மீ. தொலைவுக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் 3,500 கி.மீ. கடல் வழித்தடம் ஆகும்.

புதிய வழித்தடத்தின் மூலம் இந்தியாவில் இருந்து சரக்குகளை ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு செல்ல இரண்டு வாரங்களே ஆகும். அது இப்போது ஐந்து வாரங்களுக்கும் மேல் ஆகிறது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய சரக்குகள் சென்று சேர்வதற்கு கிரேக்கம் நுழைவாயிலாக இருக்கும் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

கிரேக்கப் பிரதமர் கடந்த பிப்ரவரி மாதம் புதுடெல்லிக்கு வருகை தந்தார். அப்போது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர். தற்போதைய தொலைபேசி உரையாடலிலும் இந்தத் திட்டம் குறித்து இந்திய, கிரேக்கப் பிரதமர்கள் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்