பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலம், ஆலாந்து சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த தேர்தலின்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி, வியாழக்கிழமை (அக்டோபர் 23) அறுவர் கைதுசெய்யப்பட்டனர்.
கலபுரகியில் உள்ள ஒரு தரவு நிலையத்திலிருந்தே வாக்காளர் பட்டியலை மாற்றிய கும்பல் செயல்பட்டதாகக் கர்நாடகக் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரின் பெயரை நீக்க ரூ.80 வழங்கப்பட்டதாகவும் அவ்வகையில், ரூ.4.8 லட்சம் கைமாறியதாகவும் சொல்லப்படுகிறது.
போலியாக வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்குவதற்கான கோரிக்கைகளைத் தாக்கல் செய்ய அக்கும்பல் எவ்வாறு தேர்தல் ஆணையத்தின் இணையவாயிலை அணுகியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
“குறைந்தது 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது,” என்று குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2022 டிசம்பரிலிருந்து 2023 பிப்ரவரிக்குள் பெயர்கள் நீக்கப்பட்டது முதற்கட்ட விசாரணைமூலம் தெரியவந்துள்ளது.
“பெயர்நீக்கம் தொடர்பில் மொத்தம் 6,994 கோரிக்கைகள் வந்தன. அவற்றில் சில உண்மையானவை. மற்றவையெல்லாம் போலிகள். குறிப்பாக, தலித், சிறுபான்மையின மக்களைக் குறிவைத்தே பெயர்நீக்க விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. பழைய வாக்காளர் பட்டியலே தொடரும்படி தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவிட்டதை அடுத்து, பெயர்நீக்கக் கோரிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டன,” என்று சிஐடி அதிகாரிகள் விளக்கினர்.
கலபுரகி மாவட்டத்திலுள்ள ஆலாந்து தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் பி.ஆர். பாட்டீல். அவரும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிரியங்க் கார்கேயும்தான் முதன்முதலில் அந்த முறைகேடு குறித்து தலைமைத் தேர்தல் அலுவலரின் கவனத்திற்குக் கொண்டுசென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் ராகுல் காந்தியும் அதுபற்றிக் குரல் எழுப்ப, கர்நாடக மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.

