தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பராமரிப்பு இல்லங்களில் 60,000 சிறார்கள்; ஆக அதிகமானோர் தமிழகப் பிள்ளைகள்

2 mins read
96a6ec10-d459-4fd1-ba52-dc9b008db10f
பராமரிப்பு இல்லங்களில் தமிழகப் பிள்ளைகள் அதிகம் உள்ளனர். - படம்: sllegalservices.com / இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் 60,000க்கும் அதிகமான சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில் வசித்து வருவதாக அந்நாட்டின் மத்திய அரசாங்கப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிள்ளைகள்தான் ஆக அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 சிறார்கள், பராமரிப்பு இல்லங்களில் கவனிக்கப்படுகின்றனர் என்று ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ முதலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வத்சல்யா இலக்குத் திட்டத்தின்கீழ் (Mission Vatsalya scheme) கவனிக்கப்படும் சிறாரின் எண்ணிக்கை இவ்வாண்டு குறைந்துள்ளது. எனினும், நாடெங்கும் அத்தகைய சிறார் பராமரிப்பு இல்லக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

சிறார் நீதிச் (சிறார் பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டம், 2015ஐ தமது அமைச்சு நடைமுறைப்படுத்தப்போவதாக இந்தியாவின் மத்திய மகளிர், சிறார் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் சிறார் போன்றோரின் நலன் உள்ளிட்ட அம்சங்களை உறுதிப்படுத்த அச்சட்டம் வகைசெய்யும்.

பராமரிப்பு, சிகிச்சை, மறுவாழ்வு போன்ற முயற்சிகளின் வாயிலாக பாதிக்கப்பட்ட சிறாருக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது அந்தச்சட்டத்தின் இலக்காகும்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அரசாங்கப் பராமரிப்பு இல்லங்களில் இருக்கும் சிறார்களில் ஆக அதிகமானோர் தமிழகத்தைச் சேர்ந்த குடும்ப ஆதரவற்ற பிள்ளைகள். 2023லிருந்து 2024க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10,118 சிறார்கள், பராமரிப்பு இல்லங்களில் கவனிக்கப்பட்டு வருகின்றனர் என்று அமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்தார்.

கடந்த 2021லிருந்து 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தமாக தெற்கு மாநிலங்களைச் சேர்ந்த குடும்ப ஆதரவற்ற 13,877 பிள்ளைகள் பராமரிப்பு இல்லங்களில் கவனிக்கப்பட்டனர்; 2022-23 காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 7,785க்குச் சரிந்தது.

கடந்த மூவாண்டுகளில் பிள்ளைகளுக்கான பராமரிப்பு இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் திருவாட்டி சாவித்ரி தாக்கூர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்