அன்பர் தினத்தை முன்னிட்டு காதல் கடிதங்களை எழுத உதவ 'சேட்ஜிபிடி' எனும் இணையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த 62 விழுக்காட்டு இந்தியர்கள் விரும்புவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நம் அன்றாட வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் 'சேட்ஜிபிடி' அதிக பங்கு வகிக்கக் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், இணையத் தொழில்நுட்பத்தால் உருவான காதல் கடிதத்துக்கும் தனிமனிதர் எழுதிய காதல் கடிதத்துக்கும் இடையே தங்களால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என 78 விழுக்காட்டு இந்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக இணையப் பாதுகாப்பு நிறுவனமான 'மெக்கஃபே' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
காதல் கடிதம் எழுத இணையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்புவதற்கான காரணங்களையும் ஆய்வில் பங்கெடுத்தவர்கள் பகிர்ந்தனர்.
'சேட்ஜிபிடி'யை பயன்படுத்துவதால் தங்களுக்குக் கூடுதல் தன்னம்பிக்கை வருவதாக 59 விழுக்காட்டினர் கூறினர். காதல் கடிதத்தை யோசித்து எழுதுவதற்கு தங்களுக்குப் போதிய நேரம் இல்லை என்று 32 விழுக்காட்டினரும் உத்வேகம் இல்லை என்று 26 விழுக்காட்டினரும் கூறினர்.
சொந்தமாக காதல் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக இணையத் தொழில்நுட்பத்தால் விரைவில் கடிதத்தைத் தயார் செய்வதற்கு எளிதாக இருக்கும் என்று 14 விழுக்காட்டினர் நம்புகின்றனர். தாங்கள் கைப்படக் காதல் கடிதம் எழுதாதது கண்டறியப்படாது என்பது அவர்களின் நம்பிக்கை.
எனினும், தங்களுக்குக் கிடைத்த காதல் கடிதம் இணையத் தொழில்நுட்பத்தால் உருவானது என்று தெரியவந்தால் தங்களுக்கு மனக்கஷ்டம் ஏற்படும் என்று 57 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.

