புதுடெல்லி: இந்தியாவில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 30 ஆண்டுகளுக்குமேல் பழைமையான ஏறக்குறைய 62,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரபூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், 1954ஆம் ஆண்டில் இருந்து நான்கு வழக்குகளும் 1955ஆம் ஆண்டில் இருந்து ஒன்பது வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல் 1952ஆம் ஆண்டில் இருந்து இரண்டு வழக்குகள் கோல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய அதிபர் திரௌபதி முர்மு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் நீதித்துறைக்குப் பெரும் சவாலாக உள்ளன என்று கூறியிருந்தார். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

