63 மாவட்டங்களில் 50% குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்; அரசு அறிக்கை

1 mins read
44a52240-5b1e-412e-adfe-ddddcd852f6e
அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு நிலையம். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 63 மாவட்டங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாக இந்திய அரசின் அறிக்கை கூறியுள்ளது.

பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சின் ஜூன் மாதத்திற்கான ஊட்டச்சத்து கண்காணிப்பு தரவுகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 63 மாவட்டங்களில் அங்கன்வாடிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். குழந்தைகள் நீண்ட காலத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை பெறாதபோது வளர்ச்சி குறைகிறது.

இதில் 34 மாவட்டங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளன. அடுத்தடுத்த நிலைகளில் மத்தியபிரேதசம், ஜார்க்கண்ட், பீகார், அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அதிக அளவிலான குழந்தைகள் வளர்ச்சி குறைபாடுள்ள மாவட்டங்களில் மராட்டியத்தின் நந்தூபார் (68.12%), ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் (66.27%), உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட் (59.48%), மத்தியப்பிரதேசத்தின் சிவபுரி (58.20%), அசாமில் போங்கைகான் (54.76%) ஆகியவை முன்னிலையில் உள்ளன.

அங்கன்வாடிகளில் 0 முதல் 6 வயதுடைய 8.19 கோடி குழந்தைகளில் 35.91 விழுக்காட்டினர் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களாகவும், 16.5 விழுக்காட்டினர் எடை குறைவாக இருப்பதாகவும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்