அமெரிக்காவிடமிருந்து 657 பழங்காலக் கலைப்பொருள்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

அமெரிக்காவிடமிருந்து 657 பழங்காலக் கலைப்பொருள்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

1 mins read
8e12c6b2-5f39-476f-9c2c-f55ea1207684
ஒப்படைக்கப்பட்ட பொருள்களில், சத்தீஸ்கரின் அவலோகிதேஸ்வரர், அபய முத்ரா புத்தர், நடன விநாயகர் போன்ற அரிய சிலைகளும் அடங்கும். - படம்: மன்ஹாட்டன்

நியூயார்க்: அமெரிக்காவிடமிருந்து கிட்டத்தட்ட 14 மில்லியன் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட $17.9மில்லியன்) மதிப்பிலான 657 பழங்காலக் கலைப்பொருள்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 28ஆம் தேதி அமெரிக்கா வெளியிட்டது.

நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ராஜலட்சுமி கடம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தப் பொருள்கள் முறைப்படி இந்தியாவிடம் வழங்கப்பட்டன.

இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் குறிவைத்து நடத்தப்படும் கடத்தல்கள் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தற்போது இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ள 600க்கும் மேற்பட்ட கலைப்பொருள்களே சாட்சி,” எனத் தெரிவித்தது.

மேலும், “துரதிர்ஷ்டவசமாக, திருடப்பட்ட கலைப்பொருள்களை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்புவதில் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. எங்களது குழுவினரின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,”என அந்த அறிக்கையில் அமெரிக்கா கூறியது.

ஒப்படைக்கப்பட்ட பொருள்களில், சத்தீஸ்கரின் அவலோகிதேஸ்வரர், அபய முத்ரா புத்தர், நடன விநாயகர் போன்ற அரிய சிலைகளும் அடங்கும்.

மற்றொரு முக்கியமான பொருள், 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிவப்பு மணற்கல் புத்தர் சிலையாகும். இதுபோன்ற நடவடிக்கை, இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்