மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: 68 ஆளும் கட்சியினர் போட்டியின்றி தேர்வு

2 mins read
739918f9-db73-4cd0-91e9-ee6dc6eb6a69
ஆளும் கட்சியினர் தேர்வான மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. - படம்: தி இந்து

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 68 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதற்கான மனுத்தாக்கல் டிசம்பர் 30ஆம் தேதி முடிவடைந்தது. வேட்பு மனுவைத் திரும்பப் பெற வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) கடைசி நாளாகும். சனிக்கிழமை (ஜனவரி 3) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்தை ஆளும் பாஜக, சிவசேனா பிரிவு, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 68 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் கேசவ் உபாத்யே தெரிவித்தார்.

அவர்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 44 பேர் என்றும் அவர் கூறினார்.

அதிகபட்சமாக, கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சியில் ஆளும் கட்சியினர் போட்டியின்றித் தேர்வாகி உள்ளனர்.

இதேபோல பன்வெல், பிவண்டி, ஜல்காவ், புனே, பிம்பிரி சிஞ்வாட், அகில்யாநகர், சத்ரபதி சம்பாஜிநகர், நாக்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் அதிகளவில் ஆளும் மகாயுதி கூட்டணிக் கட்சியினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போட்டியின்றி பலர் தேர்ந்து எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்து இருப்பதாக எதிர்க்கட்சியினர் சார்பில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை திரும்பப் பெற வைக்க மற்ற வேட்பாளர்களுக்கு அழுத்தம், மிரட்டல் விடுக்கப்பட்டதுடன் பணமும் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்