ஐந்து ஆண்டுகளில் 6,800 புதுத்தொழில் நிறுவனங்கள் மூடல்: இந்திய அரசு தகவல்

ஐந்து ஆண்டுகளில் 6,800 புதுத்தொழில் நிறுவனங்கள் மூடல்: இந்திய அரசு தகவல்

சித்திரிப்புப்படம்: தினமணி

14 Mar 2026 - 2:57 pm

2 mins read

புதுடெல்லி: புதுத்தொழில் நிறுவனங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’ திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புதுத்தொழில் நிறுவனங்களைக் கையகப்படுத்துவதை முறைப்படுத்தவும் ஆரோக்கியமான போட்டியை உறுதிசெய்யவும் இந்தியப் போட்டி ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 6,789 புதுத்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது அமைச்சர் கூறினார்.

புதுத்தொழில் நிறுவனங்களைப் பொருத்தவரை இந்தியா மிக அதிகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து வருகிறது. வேகமாக வளரும் புதுத்தொழில் சந்தையைக் கொண்டுள்ள நாடான இந்தியாவில் பெண்கள் தொடங்கும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் கடந்த ஆண்டில் ரூ.10,000 லட்சம் கோடி நிதியைப் பெற்றுள்ளன.

இந்த வளர்ச்சி ஒருபுறம் இருக்க, இந்தியாவில் பரவலாகப் பல புதுத்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் தகவலும் தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய 6,800 புதுத்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், சந்தை நிலவரமும் நிதி நெருக்கடியும்தான் நிறுவனங்கள் மூடப்படுவதற்கான முக்கியமான காரணிகள் என்றார்.

கடந்த ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி, தொழில், உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையால் மொத்தம் 212,283 புதுத்தொழில் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மொத்தமுள்ள நிறுவனங்களில் ஏறக்குறைய 3.2 விழுக்காட்டு நிறுவனங்கள் மூடப்பட்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இந்த வகையில், தகவல் தொழில்நுட்பம், சேவைத்துறை, சுகாதாரத்துறை ஆகியவை அதிக பாதிப்புகளை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் ஆக அதிகமாக, 875 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடும் போட்டியும் பல்வேறு நிறுவனங்களின் செலவினக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் துறைசார்ந்த அழுத்தங்களை அதிகரித்துவிட்டதாகவும் சுகாதாரத்துறையில் 553, கல்வித் தொழில்நுட்பத் துறையில் 491 நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் ஜிதின் பிரசாத் குறிப்பிட்டார்.

‘கொவிட்’ பெருந்தொற்று காலத்தில் கல்வி, சுகாதாரத் துறைகள் பெரும் எழுச்சி கண்ட நிலையில், அப்போதைய சூழல் இயல்புநிலைக்குத் திரும்பிய பின்னர் அத்துறைகளுக்குப் போதுமான முதலீடுகள் கிடைக்கவில்லை என்றும் நீண்டகால முதலீட்டுத் தேவைகளால் பின்னடைவைச் சந்தித்தன என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

மேலும், உணவு-பானங்கள், விவசாயம், சில்லறை வர்த்தகம் சார்ந்த புதுத்தொழில் நிறுவனங்களும் கணிசமான அளவில் முடங்கியுள்ளது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்ட திரு ஜிதின் பிரசாத், வளர்ந்துவரும் ‘ஏஐ’ துறையிலும்கூட சில நிறுவனங்கள் சரிவைச் சந்தித்திருப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்றார்.

இதற்கு நிதி திரட்டுவதில் உள்ள சிக்கல்கள், மாறி வரும் சந்தை நிறுவனங்கள் எனப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்த அவர், அமைப்பு ரீதியான தோல்வி காரணமாக, இந்நிறுவனங்கள் மூடப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்
தொழில்நிறுவனம்நாடாளுமன்றம்வர்த்தகம்அமைச்சர்