கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்குப் (எஸ்ஐஆர்) பிந்தையப் பட்டியலை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (பிப்ரவரி 28) வெளியிட்டது.
அதன்படி, அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.04 கோடியாக உள்ளது.
கோல்கத்தாவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் அகர்வால், 62 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கியது. இதையடுத்து, டிசம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்போது 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. மரணம், இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால் 7.66 கோடியாக இருந்த மேற்கு வங்க மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 7.08 கோடியாக குறைந்தது.
கடந்த சனிக்கிழமை பெயர் சேர்ப்பு, நீக்கத்தைத் தொடர்ந்து 116 நாள்களுக்குப் பிறகு, அங்கு எஸ்ஐஆர் நடவடிக்கை சார்ந்த பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.04 கோடி என மனோஜ் குமார் அறிவித்துள்ளார்.
படிவம் 7 மூலம் 5.46 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்றும் படிவம் 6, 6ஏ மூலம் 1.82 லட்சம் புதிய வாக்காளர்கள், மாநிலத்துக்குள் இடம்பெயர்ந்தவா்களுக்கு அளிக்கப்பட்ட படிவம் 8 மூலம் கூடுதலாக 6,671 வாக்காளர்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மொத்த வாக்காளர்களில் ஏறக்குறைய 3.60 கோடிக்கும் அதிகமானோர் ஆண்கள், 3.44 கோடி பேர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது. இப்பட்டியலில் 1,382 பேர் மூன்றாம் பாலினத்தவரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 60.06 லட்சம் பேரின் தகவல்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும் மனோஜ்குமார் கூறினார்.
இதனிடையே, தெற்கு கோல்கத்தாவில் அமைந்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் சொந்தத் தொகுதியான பவானிபூரில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏறக்குறைய 47 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

