செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள சுமார் 230 ஏக்கர் நிலங்கள் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அதிரடியாக மீட்கப்பட்டுள்ளன.
பதினேழாம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் இந்தக் கோயிலுக்குத் தானமாக வழங்கிய நிலங்கள் காலப்போக்கில் பல்வேறு தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அவற்றை மீட்கக்கோரி கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் இறுதியாக உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) அதிகாலை முதல் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
அறநிலையத் துறை இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் வருவாய்த் துறையினரும் இணைந்து 60க்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் கோயிலுக்குச் சொந்தமான பெயர்ப் பலகைகளையும் எச்சரிக்கை அறிவிப்புகளையும் நட்டனர்.
இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்கள் கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டன.
இதன் மூலம் சுமார் நூறு ஆண்டுகளாக நீடித்து வந்த நிலப் பிரச்சினைக்கு தற்போது ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலங்களில் தற்போது விவசாயம் செய்பவர்கள் தொடர்ந்து பயிர் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பதிலாக அவர்கள் தங்களைக் கோயில் குத்தகைதாரர்களாகப் பதிவு செய்துகொண்டு குறைந்தபட்சக் குத்தகைத் தொகையைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியுள்ளவர்களும் தாங்களாகவே முன்வந்து குத்தகைத் தொகையைச் செலுத்தி சட்டபூர்வமாகப் பதிவு செய்துகொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையினால் பல கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகப் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

