தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறையில் நடிகருக்குச் சலுகை; ஏழு அதிகாரிகள் பணியிடைநீக்கம்

2 mins read
2736a5a0-8fce-4d75-bccc-330e8d85b8ea
வலக்கையில் பானக்குவளை, இடக்கையில் சிகரெட்டுடன் நடிகர் தர்ஷன் (வலதோரம்). - படம்: இணையம்

பெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவிற்குச் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் எழுவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ரேணுகாசாமி, 33, என்ற தம் ரசிகரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தர்ஷன், நீதிமன்றக் காவல் உத்தரவின்பேரில் தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்குச் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுவதாகக் கூறி, அதற்குச் சான்றாக ஒரு புகைப்படமும் காணொளியும் இணையத்தில் வெளியானது.

இதனையடுத்து, அதன் தொடர்பில் காவல்துறை அச்சிறைக்குச் சென்று விசாரித்தது.

“முதற்கட்ட விசாரணையில், ஏழு அதிகாரிகளுக்கு அவ்விவகாரத்தில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது. இது கடுமையான பாதுகாப்புக் குறைபாடு,” என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

ஒரு கையில் பானக் குவளை, இன்னொரு கையில் சிகரெட்டுடன் நாற்காலியில் அமர்ந்தபடி, மேலும் மூவருடன் தர்ஷன் பேசிக்கொண்டிருப்பதை இணையத்தில் வெளியான புகைப்படம் காட்டுகிறது. குற்றவாளி வில்சன் கார்டன் நாகா, தர்ஷனின் மேலாளர் நாகராஜ், இன்னொரு சிறைவாசியான குள்ள சீனா ஆகியோரே மற்ற மூவர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, கைப்பேசி காணொளி அழைப்பு மூலமாக தர்ஷன் வேறு யாருடனோ பேசும் காணொளியும் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, சிறையில் தர்ஷனுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவது குறித்துப் பலரும் விமர்சித்திருந்தனர்.

ரேணுகாசாமி கொலை தொடர்பில் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 16 பேர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பவித்ராவிற்கு அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகளை அனுப்பியதால் ஆத்திரமடைந்த தர்ஷன், ரேணுகாசாமியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவரது உடல் கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று ஒரு குடியிருப்பை ஒட்டிய கால்வாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்