ஹாபூர்: உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் பேருந்து நிலையம் அருகே திங்கட்கிழமை காலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ஏறக்குறைய 70 குடிசைகளும் அருகிலிருந்த போக்குவரத்துக் கிடங்குகளும் எரிந்து சாம்பலாகின.
அந்த விபத்தினால் ரூ.1 கோடிக்கும் அதிகமான சொத்துகள் சேதமடைந்துள்ளன; பலர் தங்குமிடம் இன்றி தவித்து வருகின்றனர்.
காலை 8.30 மணியளவில் மூண்ட அந்தத் தீ, அங்கிருந்த பிளாஸ்டிக், பாலித்தீன், பழைய இரும்புப் பொருள்களில் மளமளவெனப் பரவியது.
குடிசைகளில் பற்றிய தீ, அடுத்திருந்த ‘காயத்ரி லாஜிஸ்டிக்ஸ்’, ‘யுனைடெட் டிரான்ஸ்போர்ட்’, ஒரு ஜீன்ஸ் தையல் தொழிற்சாலை ஆகியவற்றுக்குப் பரவியது.
இதில் ‘காயத்ரி லாஜிஸ்டிக்ஸ்’ கிடங்கில் இருந்த ஏறத்தாழ 1,050 சரக்கு மூட்டைகள் எரிந்து நாசமானதாக அதன் உரிமையாளர் அசோக் குமார் தெரிவித்தார்.
தீயைக் கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்களும் காவல் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டன.
தீயை அணைக்கும் பணியில் ‘புல்டோசர்’களும் பயன்படுத்தப்பட்டன.
உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பல குடும்பங்கள் தங்களது அத்தியாவசிய ஆவணங்கள், உடைமைகளை இழந்து வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தற்போது தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தத் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

