சென்னையில் திங்கட்கிழமை 71 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி ஒப்படைத்த இண்டிகோ

2 mins read
61188c14-c010-40d9-914e-394c7df2bd93
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு முக்கியமானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மீண்டும் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் முடிவுக்கு இணங்கச் செய்தார். - படம்: ராம் மோகன் நாயுடு அலுவலகம்

சென்னை: இண்டிகோ விமான நிறுவனம் சேவை பாதிப்புகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்காகப் பயணிகளுக்கு ரூ.610 கோடி பணத்தைத் திருப்பி திங்கட்கிழமை (டிசம்பர் 8) இரவுக்குள் அளிப்பதாக அறிவித்தது. மேலும், பயணிகளின் உடைமைகளையும் ஒப்படைத்து வருகிறது.

மத்திய அரசு காலக்கெடு விதித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை ஏழாவது நாளாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னையில் திங்கட்கிழமை மட்டும் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஆறு நாள்களில் 5,000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் சுமார் 8 லட்சம் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். விமானச் சேவை திங்கட்கிழமையும் ரத்து செய்யப்பட்டதன் காரணமாகப் பயணிகள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திங்கட்கிழமையும் சேவை பாதிக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களால் திங்கட்கிழமை சென்னையில் இருந்து 38 புறப்பாடு, 33 வருகை என மொத்தம் 71 விமானச் சேவைகள் ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, கடந்த நான்கு நாள்களாகப் பல்வேறு பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, விமான நிலையத்தின் அன்றாட நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து விமான நிறுவனங்கள், விமான நிலைய இயக்குநர்கள், தரைத்தள சேவைகளை வழங்கும் முகவர் நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களையும் இணைத்து தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டன.

“விமான நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் வழங்கவும், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பயணிகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

“ரத்து செய்யப்படும் விமானங்கள் குறித்த தகவல்கள், தாமதங்கள் குறித்துப் பயணிகளுக்குத் தக்க நேரத்தில் தகவல் தொடர்பை உறுதிப்படுத்தவும், ரத்து செய்யப்பட்ட அல்லது அதிக நேரம் தாமதமான விமானங்களுக்கான முழுத் தொகையையும் திங்கட்கிழமை இரவு 8:00 மணிக்குள் வழங்குமாறும் இண்டிகோ விமான நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இண்டிகோ நிறுவனம் ரத்து செய்யப்பட்ட அல்லது தாமதமான விமானங்களுக்கான பணத்தைத் திரும்ப வழங்கும் பணிகளைச் செய்து வருகிறது.

மேலும், பயணிகளின் உடைமைகளையும் ஒப்படைத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்