இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கிய 71 பேர் கண்டுபிடிப்பு

2 mins read
12b77111-d211-444b-9933-faa46818d0db
வெளிநாடுகளைச் சேர்ந்த 203 பொருளியல் குற்றவாளிகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டனர். - படம்: நியூஸ்கிராம்

புதுடெல்லி: இந்தியாவில் பொருளியல் குற்றம் புரிந்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடி பதுங்கிக்கொள்வோரில் அதிகமானோர் கடந்த நிதி ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

2024-25ஆம் நிதி ஆண்டில் அத்தகைய குற்றவாளிகள் 71 பேரை, வெளிநாடுகளின் துணையோடு இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தகவலை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சு தெரிவித்துள்ளது.

“அதிகமானோர் கண்டுபிடிக்கப்பட்டது கடந்த ஆண்டில்தான். இது கடந்த 12 ஆண்டுகளில் ஆக அதிகம்,” என்று அமைச்சு தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர், 2013ஆம் ஆண்டில் 15 பேர், 2015ஆம் ஆண்டில் 42 பேர் என பொருளியல் குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான அந்த நிதி ஆண்டில் 27 பொருளியல் குற்றவாளிகள் மீட்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

‘லுக் அவுட் நோட்டிஸ்’ பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

அதே காலகட்டத்தில், பல நாடுகளால் தேடப்பட்டுவந்த 203 பொருளியல் குற்றவாளிகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளியல் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தேசிய குற்றத் தடுப்புப் பிரிவுக்காக மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பணியாற்றிய விதத்தையும் அமைச்சு தனது அறிக்கையில் விவரித்துள்ளது.

வழக்கமாக, இந்திய நாட்டைவிட்டு தப்பி ஓடும் பொருளியல் குற்றவாளிகள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டு வெளிநாடுகளின் விசாரணை அமைப்புகளுக்கு இந்திய நீதித் துறை சார்பில் எழுத்துபூர்வ கோரிக்கை அனுப்பப்படும்.

2024-2025 நிதி ஆண்டில், வெளிநாடுகளுக்கு 74 எழுத்துபூர்வ கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. அவற்றில் 54 கோரிக்கைகள் சிபிஐ வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவை. 20 கோரிக்கைகள் மாநில சட்ட அமலாக்க மற்றும் பிற மத்திய அமைப்புகளின் வழக்குகளோடு தொடா்புடையவை.

குறிப்புச் சொற்கள்