அத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை: தீபக்

அத்தை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை: தீபக்

2 mins read
c3f514e0-43ef-458b-8e75-92665667ef1b
-

சென்னை: முன்னாள் முதல்வரும் தனது அத்தையுமான ஜெயலலிதாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் தமக்கு இல்லை என அவரது அண்ணன் மகன் தீபக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் தாம் 67 நாட்கள் உடன் இருந்ததாகவும், தம்மை யாரும் தடுக்கவில்லை என்றும் அவர் மீண்டும் கூறி உள்ளார். "அத்தை (ஜெயலலிதா) மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அருகில் இருந்து அவரை நன்றாகக் கவனித்துக் கொண்டவர் சின்ன அத்தை (சசிகலா) தான். மருந்து, சாப்பாடு, தண்ணீர் கொடுத்து பெரிய அத்தையை ஒரு குழந்தையைப் போல சின்ன அத்தை பார்த்துக் கொண்டார்.

"அத்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. வெளிநாட்டு மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் எல்லோரும் சிகிச்சை அளித்தனர். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் எல்லாம் உள்ளன," என்று தீபக் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தால் சசிகலா மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித் துள்ள அவர், சசிகலாவைப் பார்த்தாலே தமக்கும் வேதனை யில் அழுகை வந்துவிடுவதாகக் கூறியுள்ளார். "சின்ன அத்தையும் நானும் கடுமையான மனவேதனையில் உள்ளோம். இப்போது ஏற்பட் டுள்ள சர்ச்சை, எங்களது மன வேதனையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இப்போதுகூட போயஸ் தோட்டத்தில் பெரிய அத்தை இல்லாமல், ஒரு நடை பிணம் போலத்தான் சின்ன அத்தை வாழ்ந்து வருகிறார். அதனால், போயஸ் தோட்டத்துக்குப் போகாமல் உள்ளேன்.

"சின்ன அத்தை பாவம். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அத்தையுடன் ஒன்றாக வாழ்ந்தவர். அத்தையின் இழப்பு அவருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு," என்று தீபக் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை இழந்து வாடும் நிலையில் அவரது மரணம் குறித்து சர்ச்சை ஏற்படுத்துவது சரியல்ல என்றும் அதிமுகவில் அவர் வகித்த பதவி தகுதியான நபரான சசிகலாவிடம் வழங்கப் பட்டுள்ளது என்றும் தீபக் குறிப்பிட்டுள்ளார்.