நிதி மோசடிக் கைது எதிரொலி: பாஜக எம்பி வீடு மீது குண்டுவீச்சு

நிதி மோசடிக் கைது எதிரொலி: பாஜக எம்பி வீடு மீது குண்டுவீச்சு

1 mins read

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்ஃபண்ட் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அம்மாநிலத்தின் பாஜக தலைவர் வீடு குண்டுவீசித் தாக்கப்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகரின் கைது நடைபெற்ற சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சிட்ஃபண்ட் நிறுவன மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாய் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சுதீப் பந்தோபாத்யாய் எம்பி கைது செய்யப்பட்டதற்கு கட்சியில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கட்சித் தொண்டர்கள் கோல்கத்தா மத்திய பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு கட்சித் தொண்டர்களும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். உடனே கலவர தடுப்பு போலிசார் அங்கு விரைந்து வந்து தடுப்புகளை ஏற்படுத்தி இரு பிரிவினரையும் அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர்.