தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானுக்காக வேலைசெய்த 73 பேர் கைது: அசாம் முதல்வர்

2 mins read
451e5d51-d060-4c77-b3e1-a8707a68bbdf
இந்தியாவில் வசிக்கும்போது பாகிஸ்தானை அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்போரைக் கைதுசெய்யும்படி அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உத்தரவிட்டுள்ளார். - படம்: ஏஎன்ஐ

கௌகாத்தி: பாகிஸ்தானுக்காக வேலைபார்த்த சந்தேகத்தின்பேரில் இதுவரை 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா செவ்வாய்க்கிழமை (மே 20) தெரிவித்தார்.

நாட்டு நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து எக்ஸ் ஊடகம் வழியாகப் பதிவிட்டுள்ள திரு சர்மா, “சம்பளம், அதிகாரம், பதவி என இந்தியா வழங்கும் எல்லாச் சலுகைகளையும் பெற்று வந்தாலும் சிலரின் உண்மைப்பற்று எல்லை தாண்டியே உள்ளது.

“இந்தியாவிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு பாகிஸ்தானின் நலனுக்காக அவர்கள் வேலைசெய்கின்றனர். இது துரோகம். ஆப்பரேஷன் சிந்தூரைப் போல, தேச விரோதிகளை அடையாளம் கண்டு, தண்டிக்கும் நடவடிக்கை தொடரும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தனிமனிதர்களை அடையாளம் கண்டு, கைதுசெய்ய அசாம் மாநிலக் காவல்துறை எடுத்துவரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

கைதானவர்கள் இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும் இந்தியா-பாகிஸ்தான் பதற்றநிலைக்கு இடையிலும் அவர்கள் அத்தகைய பதிவுகளை இட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் வசிக்கும்போது பாகிஸ்தானை அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்போரைக் கைதுசெய்யும்படி முதல்வர் சர்மா உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அசாம் மாநிலக் காவல்துறையினர் சமூக ஊடகங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுப்பயணிகளைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதை அடுத்து, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் ‘பயங்கரவாதிகளின் முகாம்களாக’ தான் அடையாளம் கண்ட ஒன்பது இடங்களைக் குறிவைத்து மே 7ஆம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானும் பதில் தாக்குதலில் இறங்கியதால் இருதரப்பிலும் உயிருடற்சேதம் ஏற்பட்டது. பல நாடுகளின் வேண்டுகோளை அடுத்து, இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு இணங்கின.

குறிப்புச் சொற்கள்