புதுடெல்லி: இந்தியாவில் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பே கிட்டத்தட்ட 73 விழுக்காட்டு மாணவர்கள் கல்வியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) குறித்த ஆய்வுகள் அடங்கிய 2026-27ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் பத்தாவது அறிக்கை புதன்கிழமை (ஆகஸ்ட் 12) நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
தேசியக் கல்விக் கொள்கை 2020க்கு ஏற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டாலும் புதிய பாடநூல் பற்றாக்குறை, பயன்பாடு சார்ந்த புதிய தேர்வு முறைகள், குறிப்பாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதல் கல்வியியல் மன அழுத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.
எனவே, புதிய பாடநூல் மேம்பாடு, அச்சிடுதல் மற்றும் நாடு தழுவிய விநியோகத்தை விரைவுபடுத்தும்படி குழு பரிந்துரைத்துள்ளது.
தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும், மாநில அரசுகள் அதிகப் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தவும் கல்வி அமைச்சைக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் இணைய வழியில் கணிசமாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள குழு, நிதி நெருக்கடியில் உள்ள கிராமப்புறத் தனியார்ப் பள்ளி ஆசிரியர்களும் எளிதாகப் பங்கேற்கும் வகையில் பயிற்சிக் கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்புக் கழிப்பறை, சாய்தள வசதிகள் நாட்டில் உள்ள பாதியளவு பள்ளிகளில்கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் முடங்கிக்கிடப்பதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளியல் நிலையில் பின்தங்கிய, சமூக அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் விடைத்தாள் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை தேவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை 2020ன்படி கல்விக்கான பொதுச் செலவினத்தை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காடாக உயர்த்த இலக்கு வகுக்கப்பட்டபோதிலும், தற்போது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச் செலவினம் 4.1 விழுக்காடு மட்டுமே உள்ளது.
இந்த இடைவெளியைப் போக்க வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கான நிதியை கட்டாயமாக ஆண்டுதோறும் 10 விழுக்காடு உயர்த்த வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.


