தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.750 கோடி ஜிஎஸ்டி மோசடி: மூன்று மாநிலங்களில் அதிரடிச் சோதனை

1 mins read
a3383315-1618-49c2-8935-ec3677e90a56
ஜார்க்கண்டில் போலி நிறுவனங்களின் பெயரிலும் அதிகாரத்துவமற்ற நிதிப் பரிமாற்ற வழிகளிலும் மோசடி இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: போலி பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) விலைப்பட்டியல்களை உருவாக்கி, அவற்றின்மூலம் ரூ.750 கோடி (S$108.4 மில்லியன்) மோசடி செய்த விவகாரம் தொடர்பில் ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் இந்திய அமலாக்கத்துறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ஜார்க்கண்டில் போலி நிறுவனங்களின் பெயரிலும் அதிகாரத்துவமற்ற நிதிப் பரிமாற்ற வழிகளிலும் அம்மோசடி இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

போலி நிறுவனங்கள் மூலம் கிட்டத்தட்ட ரூ.5,000 கோடி மதிப்பிற்குப் பொருள்களை வாங்கியதாகக் கூறி, அதற்கான விலைப்பட்டியல்களைத் தயாரித்து, அதன்மூலம் ரூ.750 கோடி வரிச்சலுகை பெற்றாதாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கின் மூளையாகச் செயல்பட்டதாகச் சொல்லப்படும் ஷிவகுமார் தியோரா என்பவர் இவ்வாண்டு மே மாதம் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் பல தனிமனிதர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளதாகக் கிடைத்த நம்பத்தகுந்த தகவலை அடுத்து, இப்போதைய சோதனைகள் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

சோதனைகளில் ஆவணங்கள் எதுவும் சிக்கினவா, எவரும் கைதுசெய்யப்பட்டனரா என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இம்மோசடி தொடர்பில் கடந்த மே மாதத்தில் அமலாக்கத் துறை முதற்கட்டச் சோதனைகளை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்