இந்திய நாடாளுமன்றத்தில் 74 பெண் எம்.பி.க்கள்; 11 பேருடன் மேற்கு வங்கம் முதலிடம்

1 mins read
2747b4d9-8882-45b0-9db8-1380a2917866
 நாட்டிலேயே அதிகபட்சமாக 11 பெண் எம்.பி.க்களைத் தோ்வு செய்து, மக்களவைக்கு அனுப்பியுள்ளது மேற்கு வங்கம். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தற்போதைய 18ஆவது மக்களவையில் மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 74 பேர் பெண்கள்; இவா்களில் 11 பேர் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவர்கள் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் எம்.பி.க்களைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 73 பேர் தோ்வாகியுள்ளனா்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தோ்தல், கடந்த ஆண்டு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தோ்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் வரைபடங்களுடன் தகவல் தொகுப்பேட்டை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு மக்களவையில் மொத்த பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 74. நாட்டிலேயே அதிகபட்சமாக 11 பெண் எம்.பி.க்களைத் தோ்வு செய்து, மக்களவைக்கு அனுப்பியுள்ளது மேற்கு வங்கம்.

மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசத்தில் தலா ஏழு பெண் எம்.பி.க்கள், மத்தியப் பிரதேசத்தில் ஆறு பெண் எம்.பி.க்கள், தமிழகத்தில் ஐந்து பெண் எம்.பி.க்கள் தேர்வாகியுள்ளனர். கேரளம், அருணாசலப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்களில் ஒரு பெண் எம்.பி.யின் பிரதிநிதித்துவம் கூட இல்லை.

அதிக பெண் வேட்பாளா்கள்

மக்களவைத் தோ்தலில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 111 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனா். அடுத்தடுத்த இடங்களில் உத்தரப் பிரதேசம் (80), தமிழகம் (77) உள்ளன. நாட்டில் 152 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை.

மக்களவைத் தோ்தலில் விகிதாச்சார அடிப்படையில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் பங்கேற்றுள்ளனா். பெண் வாக்காளா்கள் 65.78 விழுக்காடும், ஆண் வாக்காளா்கள் 65.55 விழுக்காடும் வாக்களித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்