தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் மீட்பு

1 mins read
e386f22f-5f50-4839-955e-10496209ca17
மீட்கப்பட்ட இந்திய நாட்டவர் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: போர்ப் பதற்றம் மிகுந்த சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது.

சிரியாவில் 1971ஆம் ஆண்டுமுதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த பஷார் அல்-அசாத்தின் குடும்ப ஆட்சி கவிழ்ந்தது. அசாத் நாட்டைவிட்டு தப்பி ஓடி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக் கைப்பற்றின. புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பணிகளில் அந்தக் குழுக்களின் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், பதற்றம் மிகுந்த பகுதிகளில் இருந்து இந்திய நாட்டவரை மீட்கும் முயற்சியாக, சிரியா தலைநகா் டமாஸ்கஸ், லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “சிரியாவில் இருந்து 75 இந்தியா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

“சைதா ஜைனாப் நகரில் சிக்கித் தவித்த ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 44 புனிதப் பயணிகளும் அவர்களுள் அடங்குவா்.

“மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக லெபனானைச் சென்றடைந்தனா். அங்கிருந்து வர்த்தக விமானங்கள் மூலம் 75 பேரும் இந்தியா திரும்புவாா்கள்.

“டமாஸ்கஸ், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தன.

“சிரியாவில் இருக்கும் இந்தியா்கள் தகவல்களுக்காக டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடா்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

சிரியா நிலைமையை தொடா்ந்து மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்