ஜான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 35 வயதுப் பெண்ணை திருமணம் செய்த மறுநாளே 75 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கச்மச் என்னும் கிராமத்தின் விவசாயியான சங்குரு ராம் என்னும் அந்த முதியவரின் மனைவி கடந்த ஆண்டு இறந்தார். அவர்களுக்குக் குழந்தை இல்லை.
முதியவரின் இரு சகோதரர்களும் டெல்லியில் வர்த்தகம் புரிகின்றனர்.
தனிமையில் வாடிய சங்குரு ராம், மறுமணம் செய்ய பெண் தேடினார். அவரின் விருப்பத்தை கிராம மக்கள் ஏற்கவில்லை. அவருக்குப் புத்திமதி கூறினர்.
இருப்பினும், விடாப்பிடியாக ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார் அவர். ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த மன்பாவதி என்னும் 35 வயதுப் பெண்ணைச் சந்தித்து தமது விருப்பத்தைக் கூறினார்.
அந்தப் பெண் ஏற்கெனவே மணம் புரிந்து கணவரைப் பிரிந்து வாழ்கிறார். அவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
சங்குரு ராமின் விருப்பத்தை மன்பாவதி ஏற்றதால் கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இருவருக்கும் கோவில் ஒன்றில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
ஆனால், செவ்வாய்க்கிழமை காலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அச்சம்பவம் குறித்து மணமகள் மன்பாவதி கூறுகையில், “இரவில் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். காலையில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்கான காரணம் தெரியவில்லை,” என்றார்.
சங்குரு ராமின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறினர். அந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதா எனத் தெரியவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிட்டன.