சம்பல்பூர்: தம் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரை ரிக்ஷாவில் வைத்து 300 கிலோமீட்டர் தொலைவிற்கு அழைத்துச் சென்ற 75 வயது ஆடவரின் செயல் தியாகத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.
சிகிச்சைக்குப் பின் மீண்டும் ரிக்ஷாவிலேயே அவர்களது பயணம் தொடங்கியது.
பாபு லோகர் - ஜோதி லோகர் என்ற இந்த முதிய இணையர் இந்தியாவின் ஒடிசா மாநிலம், சம்பல்பூரின் கோல்பசார் பகுதியில் வசித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 70 வயதான ஜோதி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சம்பல்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கட்டாக்கிலுள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றால் சிறந்த சிகிச்சை பெறலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
ஆனால், ஜோதியை அங்கு அழைத்துச் செல்வதற்கு அவரின் குடும்பத்தாரிடம் போதிய பணம் இல்லை.
வேறு வழி இல்லாததால், தம் மனைவியை தமது ரிக்ஷாவிலேயே அமரவைத்து, கட்டாக்கை நோக்கிய நெடும்பயணத்தைத் தொடங்கினார் பாபு.
பகலில் 30 கிலோமீட்டர் பயணம், இரவில் சாலையோரத் தேநீர்க் கடைகளுக்கு அருகே ஓய்வு என ஒன்பது நாள் பயணத்திற்குப் பின் கட்டாக்கை அவர்கள் சென்றடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கட்டாக்கில் இரு மாதகாலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின் ஜனவரி 19ஆம் தேதி சம்பல்பூரை நோக்கிய அவர்களின் ரிக்ஷா பயணம் தொடங்கியது. ஆனாலும், அவர்களைத் துயரம் தொடர்ந்தது.
சௌத்வார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்களது ரிக்ஷாமீது மோதியது. அதில் ஜோதி கீழே விழுந்து, தலையில் காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு டாங்கி சமூகச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்றிரவு அங்கு தங்கியபின், மறுநாள் ஜனவரி 20ஆம் தேதி அவ்விணையர் ரிக்ஷாவில் மீண்டும் தங்களது பயணத்தைத் தொடங்கினார்.
“சம்பல்பூருக்கு நாங்கள் திரும்பிச் செல்வோம். அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் பிகாஷ் பெரிதும் உதவி செய்தார். அதனை வார்த்தைகளில் விவரிக்க முடியாது,” என்று பாபு கூறியதாக ஒடிசா தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.
வயதான காலத்தில் பெற்றோரைப் பிள்ளைகள் புறக்கணிப்பது அதிகமாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், பாபு-ஜோதி இணையரின் இந்தப் போராட்டம் எதிர்பார்ப்பில்லா அன்பிற்கும் தியாகத்திற்கும் அரிய முன்மாதிரியாக விளங்குகிறது.
அதே நேரத்தில், ஏழை மக்களும் முதியவர்களும் அடிப்படை மருத்துவ, போக்குவரத்து வசதிகளுக்காக எதிர்கொள்ளும் கடுமையான சிரமங்களையும் இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

