தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
2047ஆம் ஆண்டிற்குள் ‘வளர்ச்சி கண்ட இந்தியா’ என்ற தேசிய இலக்கை எட்ட அயராது பாடுபட இந்திய அதிபர் வேண்டுகோள்

இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு நிறைவு: அஞ்சல் தலை, நாணயம் வெளியீடு

2 mins read
c70782ee-a017-4636-91af-d9aa7e25b8dc
இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு நிறைவையொட்டி இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் நினைவு அஞ்சல் தலை, நாணயம் வெளியிடப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பின் மூலம் சமூக நீதி, வளர்ச்சிக்கான இலக்குகளை நாடு அடைந்துள்ளது என்று இந்திய அதிபர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26 தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசமைப்புச் சட்டம் ஏற்பட்டதன் 75ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்து திருவாட்டி திரௌபதி முர்மு உரையாற்றினார்.

“இந்திய அரசியலமைப்பு உயிருள்ள முற்போக்கான ஆவணம். இதன் மூலம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம். குடிமக்களின் காவலனாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளது,” என்றார் அவர்.

“அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அனைத்து குடிமக்களும் தங்களது கடமைகளைச் செய்ய வேண்டும். 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய அனைவரும் உழைக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசியல் சாசன 75வது ஆண்டு நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை அதிபர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.

அரசமைப்புச் சட்டத்தின் சமஸ்கிருதம், மைதிலி மொழி பதிப்புகளும் ‘அரமைப்புச் சட்ட உருவாக்கம்: ஒரு பாா்வை’, ‘அரசமைப்புச் சட்ட உருவாக்கமும் அதன் பெருமைமிகு பயணமும்’ என்ற இரு நூல்களும் வெளியிடப்பட்டன.

இந்தியாவில் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக 2015ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26ஆம் தேதியன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1946 டிசம்பரில் கேபினட் மிஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. இதில் அம்பேத்கர், நேரு, வல்லபாய் படேல் ஆகிய முக்கிய தலைவர்களுடன் 389 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 299 ஆகக் குறைக்கப்பட்டது.  

பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த அரசியல் சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவின் ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் சமத்துவக் கட்டமைப்பை வரையறுக்கும் வகையிலான அடிப்படை ஆணவமாகச் செயலாற்றுகிறது.

உலகிலேயே நீண்ட அரசியலமைப்புச் சட்டமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்