மும்பை: ‘ஆர்ஆர்ஆர்’ புகழ் ஆலியா பட்டின் முன்னாள் செயலாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டியை ரூ.76 லட்சம் (S$114,830) மோசடி வழக்குத் தொடர்பில் மும்பை காவல்துறை கைதுசெய்துள்ளது.
பெங்களூரில் கைதுசெய்யப்பட்ட அவர் பின்னர் விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனமான ‘எட்டெர்னல் சன்ஷைன்’ நிறுவனத்தில் வேதிகா தமது பொறுப்பைப் பயன்படுத்தி பணத்தைக் கையாடல் செய்து, அதனைத் தன் நண்பரின் கணக்கிற்கு மாற்றிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அந்த நண்பர் அப்பணத்தை வேதிகாவிற்குத் தந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த முறைகேடு 2022ஆம் ஆண்டிற்கும் 2024ஆம் ஆண்டிற்கும் இடையே நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
நிதி முறைகேடுகளைக் கண்டறிந்ததும் அதுகுறித்து இவ்வாண்டு ஜனவரி மாதம் ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் காவல்துறையில் புகாரளித்தார். மும்பையின் ஜூகு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட அப்புகாரின் அடிப்படையில் முறையான விசாரணை தொடங்கியது.
பணத்தைக் கையாடியதாகச் சந்தேகிக்கப்படும் வேதிகா தலைமறைவாகிவிட்டதாகவும் கைதாகாமல் தப்பிப்பதற்காக அவ்வப்போது இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரில் பிடிபட்ட அவர்மீது நம்பிக்கை மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
அவர் எவ்வளவு தொகையைச் சுருட்டினார் என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்கள் தற்போது அவரது வங்கி ஆவணங்களை ஆராய்ந்து வருவதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இம்மோசடி தொடர்பில் ஆலியாவின் எட்டெர்னல் சன்ஷைன் நிறுவனம் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம், ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘டார்லிங்ஸ்’ என்ற படத்தைத் தயாரித்து, நெட்பிளிக்சில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.