தேநீர் மட்டுமே அருந்தி உயிர்வாழும் 76 வயது மூதாட்டி

தேநீர் மட்டுமே அருந்தி உயிர்வாழும் 76 வயது மூதாட்டி

2 mins read
daf5f12b-a0e6-4251-af66-33dc0631e093
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திட உணவே உட்கொள்ளாத திருவாட்டி அனிமா சக்கரவர்த்தி. படம்: நியூஸ்18 -

படிப்பதற்கு மாயாஜாலக் கதைபோல இருந்தாலும் இது முற்றிலும் உண்மை. தேநீரையும் ஆரோக்கிய பானங்களையும் மட்டும் அருந்தி, உயிர்வாழ்கிறார் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அனிமா சக்கரவர்த்தி எனும் 76 வயது மூதாட்டி.

ஹூக்ளி மாவட்டம், பெல்திகா எனும் சிற்றூரைச் சேர்ந்த திருவாட்டி அனிமா, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வேறு எந்த உணவையும் அவர் தொட்டதில்லை என்கின்றனர் அவரின் குடும்பத்தினர்

இதுதொடர்பாக அவரின் மகன் கூறுகையில், "முன்னர் எங்கள் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தது. என் தாயார் பல வீடுகளில் வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவ்வீடுகளில் கிடைக்கும் சோறு, அரிசிப்பொரியை அவர் எங்களுக்குக் கொடுத்துவிடுவார். அவருக்கு எதுவும் மிஞ்சியிருக்காது," என்று விவரித்தார்.

அதனால், திருவாட்டி அனிமா நாளடைவில் திரவ உணவுக்கு தம்மைப் பழக்கிக்கொண்டார்.

இதுபற்றி ஹூக்ளியைச் சேர்ந்த டாக்டர் பில்லேஸ்வர் பல்லவ் கூறுகையில், "நாம் உயிரோடு வாழ நம் உடலுக்கு ஆற்றலும் ஊட்டச்சத்துகளும் தேவை. நாம் உண்ணும் உணவு திரவமாக அல்லது மென்று தின்பதாக இருக்கலாம். எந்த உணவை உண்டாலும் சரி, அதில் ஊட்டச்சத்து இருந்தால் போதும்," என்றார்.

நீண்டகாலமாக தன்னினைவின்றி 'கோமா' நிலையில் அல்லது நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் குழாய் மூலம் திரவ உணவாக எடுத்துக்கொண்டு உயிர்வாழ்கிறார்கள். அதுபோல, திருவாட்டி அனிமா அருந்தும் பானங்களில் இருந்து அவரது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைத்துவிடுகின்றன என்றார் டாக்டர் பல்லவ்.

வெறும் திரவத்தை மட்டுமே அருந்தி வாழும் திருவாட்டி அனிமாவை வியப்பாகப் பார்க்கும் பெல்திகாவாசிகள், அவரை நினைத்துப் பெருமிதமும் கொள்கின்றனர்.