76வது குடியரசு தினம்: டெல்லி, சென்னையில் தீவிர பாதுகாப்பு

3 mins read
fd4b51fc-68aa-4b26-975e-d3d433509a2c
குடியரசு தின விழாவின்போது, நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் வகையிலும் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது. - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்திய குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், டெல்லியில் 15 ஆயிரம், தமிழகத்தில் முழுவதும் சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில், விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் தண்டவாளங்களில் மோப்ப நாய்களின் உதவியோடு ரயில்வே காவல்துறையினர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்தியாவின் 76வது குடியரசு தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து டெல்லி, அதன் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆளில்லா சிறிய ரக வானூர்திகள், ரகசியக் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் மட்டும் கூடுதலாக 70 கம்பெனி துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் பல அடுக்கு தடுப்புகள் போடப்பட்டிருப்பதுடன், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பமும் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படுகிறது.

டெல்லியில், 4,000 இடங்களில் கட்டடங்களின் மேல் தளங்களில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதையின் இருபுறங்களிலும் உள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மதியமே மூடப்பட்டுவிட்டதாகவும், அங்குள்ள கட்டடங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டும் வழக்கம்போல், நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் வகையிலும் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது.

தமிழகத்திலும் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நட்சத்திர விடுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் உடைமைகளை பரிசோதித்த பிறகே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

விழாவுக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைப்பார்.

அப்போது அப்பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும் என்றும் அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு என்றும் ஊடகச் செய்திகள் மேலும் தெரிவித்தன.

வருகிறது பிரளய் ஏவுகணை:

இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள ‘பிரளய்’ ஏவுகணை முதல்முறையாக இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின்போது காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இது தரையில் உள்ள இலக்குகளைக் குறி வைத்து துல்லியமாக தாக்கும் திறன்பெற்ற ஏவுகணையாகும்.

இந்திய ராணுவத்தின் சிறப்பு வாய்ந்த பிரித்வி ஏவுகணையை முன்மாதிரியாகக் கொண்டு பிரளய் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இது 350 கி.மீ. முதல் 500 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கை தாக்கக்கூடியது.

500 கிலோ முதல் 1,000 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் உடையது.

குறிப்புச் சொற்கள்