கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை காரணமாக 77 பேர் உயிரிழந்துவிட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை சரி செய்வதற்குப் பதிலாக, வாக்காளரை நீக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக எஸ்ஐஆர் மாற்றப்பட்டுவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறு எழுத்துப்பிழை அல்லது வயது முரண்டாடுகூட பெரிதுபடுத்தப்படுகின்றன. சாதாரண மக்களிடம் வலுக்கட்டாயமாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாகவும் மம்தா சாடியுள்ளார்.
இத்தகைய செயல்பாடுகளால் சாதாரண மக்கள் ஊதிய இழப்புக்கு ஆளாகி துன்பம் அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“எஸ்ஐஆர் நடவடிக்கையால் ஏற்கெனவே 77 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 4 பேர் உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.
“மேலும் 17 பேர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய நிலை உருவாகி உள்ளது,” என்று முதல்வர் மம்தா பானர்ஜி மேலும் தெரிவித்துள்ளார்.

