டெல்லியில் இரவுப் பேருந்துப் பயணம் பாதுகாப்பற்றது: 77% பெண்கள் கருத்து

2 mins read
f8ccf754-998c-4d2b-b667-eadf11f9d930
77 விழுக்காட்டுப் பெண்கள் டெல்லியில் இரவு நேரப் பயணம் பாதுகாப்பானதாக இல்லை என உணர்வதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லி நகர நிர்வாகத்தின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தில் வழங்கப்படும் பிங்க் (இளஞ்சிவப்பு) பயணச்சீட்டு எண்ணிக்கை நூறு கோடி என்ற மைல் கல் சாதனையை எட்டியிருக்கும் நிலையில், 77 விழுக்காட்டு பெண்கள் டெல்லியில் இரவு நேரப் பயணம் பாதுகாப்பானதாக இல்லை என உணர்வதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுசாரா நிறுவனமான ‘கிரீன்பீஸ்’ இந்தியாவின் அண்மைய அறிக்கையான ‘ரைடிங் தி ஜஸ்டிஸ் ரூட்’டில் கூறியிருப்பதாவது: “இதற்காக ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பெண்களில் 75 விழுக்காட்டினர் பிங்க் டிக்கெட் திட்டத்தின் மூலம் சேமிக்கும் பணத்தை வீட்டுச்செலவுகள் அவசர மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். அதேபோல் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பெண்களில் 25 விழுக்காட்டினர், புதிதாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தத் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்து வந்தனர்.

“இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் பேருந்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் தொடரவே செய்கின்றன. 77 விழுக்காட்டு பெண்கள் இருட்டிய பின்பு பேருந்து பயணம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவே உணர்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். போதிய வெளிச்சம் இல்லாதது,  பேருந்து வசதிகள் அடிக்கடி இல்லாதது போன்றவற்றை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பல பெண்கள் அத்துமீறல் பிரச்சினைகள், குறிப்பாக கூட்டமான பேருந்துகளில் அப்பிரச்சினை அதிகமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிங்க் டிக்கெட் திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் தங்களின் பயணத்துக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் அவர்கள் விரும்பினால் பயணச்சீட்டு வாங்கிக் கொள்ளலாம்.

கிரீன்பீஸ் இந்தியாவின் ஆகிஷ் ஃபரூக் கூறுகையில், “இந்தத் திட்டம் பெண்களுக்கு டெல்லியின் பொதுப் போக்குவரத்து பயணத்தை எளிமையாக்கியுள்ளது. ஆனால் இதை நாம் முழுமையான மாற்றமாக ஆக்குவதற்கு பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். எல்லாருக்கும் பொதுப் போக்குவரத்து எளிதாகக் கிடைக்கும் வகையில் அனைத்து இணைக்கப்பட்ட சேவைகளை உறுதி செய்ய வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

கிரீன்பீஸ் இந்தியாவின் அறிக்கை, “சுமார் 100 கோடி என்ற மைல் கல் சாதனையை எட்டியிருக்கும் பிங்க் டிக்கெட் திட்டம், பெண்களுக்குப் பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை அளித்திருப்பதோடு, தனியார் வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு அதிகரித்திருப்பதால் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைத்துள்ளது,” என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான மற்றும் நிலையான நகரங்களை உருவாக்க உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நாடு முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்