புதுடெல்லி: இணையக் குற்றச்செயல்களுக்காக நாடு முழுவதும் 8.50 லட்சம் போலி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
நாடு தழுவிய அளவில், மொத்தம் 700 வங்கிக் கிளைகளில் இந்த போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டதாக சிபிஐ விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மின்னிலக்க குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு நூதனமான முறைகளில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
மின்னிலக்க கைது, பண மோசடி, ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளங்கள்மூலம் வங்கிக் கணக்குகளைக் கொண்டு அரங்கேறும் மோசடிகள் என பல வகையிலும் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
இத்தகைய போலி வங்கிக் கணக்குகளை ‘மியூல்’ எனக் குறிப்பிடுகிறார்கள். பண மோசடி செய்வதற்காகவே இத்தகைய போலி, சட்டவிரோத வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன.
கணக்குகளில் செலுத்தப்படும் பணம் அடுத்த சில நொடிகளில் பல்வேறு கிளைக் கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் இந்த வங்கிக் கணக்குகளை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். இத்தகைய மோசடிக் கணக்குகளைக் கண்டறிய சிபிஐ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மின்னிலக்க மோசடி தொடர்பாக ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் 42 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடிச் செயல்கள் தொடர்பாக இடைத்தரகர்கள், முகவர்கள், வங்கி ஊழியர்கள் என ஒன்பது பேர் கைதாகினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போதுதான், இந்தியா முழுதும் 700 வங்கிக்கிளைகளில் 8.50 லட்சம் போலிக் கணக்குகள் இருப்பது தெரியவந்தது.