புதுடெல்லி: இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளையர்களில் ஏறக்குறைய 8.7 கோடி பேர் கல்வியோ, முறையான தொழிற்பயிற்சியோ பெறாமலும் எந்தவொரு வேலையிலும் ஈடுபடாமலும் இருப்பதாக இந்திய நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
‘2047ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியாவுக்கான திறனை மீண்டும் கட்டமைத்தல்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கல்வி நிறுவனங்களில் சேராத அல்லது முறையான பணி வாய்ப்பைப் பெறாத இளையர்களின் எண்ணிக்கை பேரளவில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், நாட்டில் உயர்கல்வி முடித்த பட்டதாரிகளில் ஏறக்குறைய 8.25 விழுக்காட்டினர் மட்டுமே தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியில் உள்ளனர்.
நிதி ஆதரவும் பயிற்சியும்
இளையர்களின் தடையற்ற முன்னேற்றத்திற்கு நிதிச் சவால்கள் பெரும் காரணியாக உள்ளன. எனவே, அவர்களுக்குக் குறைந்த கட்டணத்திலோ அல்லது கட்டணத் தள்ளுபடியிலோ தொழிற்சார் பயிற்சிகளை வழங்க வேண்டும் என நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது.
ஊதியத்துடன் கூடிய பயிற்சி
இளையர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில், அனைத்து முக்கியத் துறைகளிலும் ஊதியத்துடன் கூடிய பயிற்சியை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பை மட்டும் நம்பியிருக்காமல் இளையர்கள் சுயவேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான கடன் உதவிகளையும் வழிகாட்டல்களையும் அரசு விரிவுபடுத்த வேண்டும் என்றும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறவேண்டுமெனில், இளையர்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“2014-15ஆம் ஆண்டு முதல் இதுவரை 7.67 கோடிக்கும் அதிகமானோருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், இன்னும் இலக்கை அடைய கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. திறன்களை மேம்படுத்துவதன் மூலமே நாட்டின் பொருளியல் வளர்ச்சியை வேகப்படுத்த முடியும்,” என்றும் அந்த ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.


