சிக்கிமில் சுரங்க விபத்து; 9 பேர் உயிரிழப்பு

சிக்கிமில் சுரங்க விபத்து; 9 பேர் உயிரிழப்பு

2 mins read
281e0802-a81e-4e77-9f49-5bb539ff0401
சிக்கிம் சுரங்கத்தில் கிட்டத்தட்ட 27 பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை மீட்க மாநிலப் பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, சிக்கிம் காவல்துறை, தீயணைப்பு, அவசரகாலச் சேவைகள், சுகாதாரத் துறையைச் சேர்ந்தோர் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர். - படம்: தி இந்து

காங்டாக்: சிக்கிம் மாநிலம், நாம்ச்சி மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 27க்கு மேற்பட்ட ஊழியர்கள் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

திங்கட்கிழமை (ஜூலை 20) சுரங்கத்தில் ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. சிலர், அந்த விபத்தில் இருந்து உயிர் தப்பிய நிலையில், கிட்டத்தட்ட 27 பேருக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்களில் 21 பேர் ஒப்பந்த ஊழியர்கள் என்றும் 6 பேர் தேசிய ‘ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சுரங்கத்தின் அடியில் கிட்டத்தட்ட 1.5 கிலோ மீட்டர் தொலைவில் மீத்தேன் வாயு வெடித்த காரணத்தால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் அதன் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீஸ்தா ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்ட 6ஆம் கட்டப் பணிகள் நிமித்தமாக இந்தச் சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், விபத்தை அடுத்து அங்கு மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

நாம்ச்சி மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், மாநிலப் பேரிடர் மீட்புப் படை, தேசியப் பேரிடர் மீட்புப் படை, சிக்கிம் காவல்துறை, தீயணைப்பு, அவசரகாலச் சேவைகள், சுகாதாரத் துறை மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சிக்கிம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

“சுரங்கத்தினுள் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு முன்னுரிமை அளித்து, அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனு. அதன் பின்னர்தான் மண் சரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள மீதமுள்ள தொழிலாளர்களை மீட்க, சிறப்புக்குழுவினரும் இந்த நடவடிக்கைக்கு அயராது உழைத்து உதவி வருகின்றனர்,” என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமை குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகச் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு அளிக்கும். அத்துடன் இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று மாநில அரசுக்குப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்