ரயில் மோதி 8 யானைகள் மரணம்

2 mins read
edef614c-8135-44bb-b119-3f3165e99c10
யானைகள் செல்லும் பகுதியாக அறிவிக்கப்படாத இடத்தில் விபத்து நேர்ந்தது. - படம்: என்டிடிவி

திஸ்பூர்: அசாமின் ஹோஜாய் பகுதியில் சாய்ராங்- புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி குறைந்தது எட்டு யானைகளும் ஒரு யானைக்குட்டியும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக ரயில் சேவைகளில் மிகப் பெரிய தடங்கல் ஏற்பட்டுள்ளது.

யானைக் கூட்டம்மீது சாய்ராங்- புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ரயிலின் எஞ்சின் பெட்டி உள்பட ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. சம்பவத்தில் பயணிகள் மாண்டதாகவோ காயமுற்றதாகவோ தகவல் இல்லை.

வனத்துறை அதிகாரிகள் ரயில் விபத்தால் எட்டு யானைகள் மாண்டதையும் ஒரு யானைக்குட்டி மீட்கப்பட்டதையும் உறுதிப்படுத்தினர்.

புதுடெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ரயில் விபத்து பின்னிரவு 2.17 மணியளவில் நேர்ந்ததாகத் தகவல்கள் கூறின.

ரயில் தடம் புரண்டதாலும் யானைகளின் உடல் பாகங்கள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்ததாலும் அப்பர் அசாம் உள்பட வடகிழக்கின் பிற பகுதிகள் வரை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் ரயிலின் பிற காலியான பெட்டிகளுக்குத் தற்காலிகமாக அனுப்பப்பட்டனர்.

ரயில் குவஹாத்தி நிலையத்தைச் சென்றடைந்தவுடன் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் ரயில் அதன் பயணத்தைத் தொடரும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

யானைகள் செல்லும் பகுதியாக அறிவிக்கப்படாத இடத்தில் விபத்து நேர்ந்தது.

ரயிலைச் செலுத்திக்கொண்டிருந்த ஓட்டுநர் யானைக் கூட்டத்தைக் கண்டவுடன் ரயிலை உடனடியாக நிறுத்த முயற்சி செய்தார். அப்படியிருந்தும் யானைகள் ரயிலை நோக்கி ஓடிவந்ததால் விபத்தைத் தவிர்க்க முடியாமல் போனது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 30ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் உள்ள ஜல்பாய்குரி வட்டாரத்தில் உள்ள தூப்குரியில் ரயில் மோதி யானை ஒன்று மாண்டது.

சம்பவ இடத்தில் மாண்ட யானைக்கு அருகில் அதன் குட்டி கண்டெடுக்கப்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் ரயில்கள் மோதி 79க்கும் அதிகமான யானைகள் மாண்டதாக சுற்றுப்புற அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

அத்தகைய விபத்துகளைத் தவிர்க்க சுற்றுப்புற அமைச்சும் ரயில்வேத் துறையும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொள்வதாக சுற்றுப்புறத் துணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறினார்.

யானைகளின் வசிப்பிடங்களில் ரயில்களுக்கு வேகக் கட்டுப்பாட்டை விதிப்பது, தண்டவாளங்களுக்கு அருகே யானைகள் வருவதை உணர்கருவிகள் மூலம் ஓட்டுநர்களுக்குத் தெரிவிப்பது ஆகியவை அவற்றுள் சில முயற்சிகள்.

குறிப்புச் சொற்கள்
யானைரயில்விபத்து