தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

48 மணி நேரமாக சிக்கித் தவிக்கும் 8 பேர்: சுரங்கப்பாதை மீட்புப் பணியில் சில்கியாரா குழு

2 mins read
d9596333-2052-4e33-9053-ef3d1e935460
சேறு காரணமாக சுரங்கப்பாதையின் இடிந்து விழுந்த பகுதி வரை செல்ல முடியாமல் மீட்புக்குழுவினர் தவிப்பு. - படம்: ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் 48 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கியுள்ள எட்டுத் தொழிலாளர்களை மீட்க மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

சேறு குவிந்து கிடப்பதும் தண்ணீர் தேங்கி நிற்பதும் மீட்புப் பணிக்கு இடையூறாக இருப்பதால், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று மாநில அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநில நிறுவனங்கள் ஆகியன ஏற்கெனவே மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

அதே சமயம் கடற்படை வீரர்களும் அவர்களுக்கு உதவ வந்துள்ளனர்.

உத்தராகண்டில் 2023ஆம் ஆண்டு நடந்த சில்கியாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் 17 நாள்கள் தொடர் போராட்டத்துக்குப் பின்னர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்த வீரமிக்க குழுவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் இப்போதைய சுரங்கப்பாதை மீட்புப் பணிகளில் இணைந்துள்ளனர்.

நாகர்கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்குப் பின்னால் உள்ள 44 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையின் கூரை, சில தொழிலாளர்கள் உள்ளே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது.

அவர்களில் பெரும்பாலானோர் தப்பித்து விட்டனர். எட்டுப் பேர் மட்டும் சிக்கிக்கொண்டனர்.

அவர்களில் நான்கு பேர் அங்குள்ள ஊழியர்கள் என்றும் நான்கு பேர் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடும் மாநில அமைச்சர் கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

“சுரங்கப்பாதையின் முகப்பில் இருந்து குறைந்தது 13 கி.மீ. தொலைவில் சரிவு ஏற்பட்டது. மீட்புப் பணியாளர்கள் இறுதிப் பகுதியின் 100 மீட்டர் தூரத்தை அடைந்துவிட்டனர். ஆனால் மீட்பு நடவடிக்கைக்கு தண்ணீரும் சேறும் இடையூறாக உள்ளது,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

“சுரங்கப்பாதையின் உள்ளே சேறு மிக உயரமாகக் குவிந்துள்ளது, இதனால் நடக்கவே முடியவில்லை. மீட்புப் பணியாளர்கள் ரப்பர் குழாய்கள் மற்றும் மரப் பலகைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஊழியர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். எந்த முயற்சியையும் விட்டுவிடவில்லை,” என்று திரு. ராவ் கூறினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகள் குறித்து விசாரித்தார். பிரதமர் நரேந்திர மோடி மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவியையும் வழங்குவதாக உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

திரு. ரெட்டியின் அலுவலகம், நிலைமையைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் மூத்த அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெற்று வருவதாகவும் கூறியது.

சுரங்கப்பாதைக்குள் இருந்து தண்ணீரை வெளியேற்றவும், பிராணவாயு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் சேற்றை அகற்றி, சுரங்கப்பாதை இடிந்து விழுந்த இடத்திற்குச் செல்ல மாற்று வழிகளைக் கண்டறிய முயற்சித்து வருவதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்