ஹைதராபாத்: இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் (ஐடி) பணிபுரியும் ஊழியர்களில் 80 விழுக்காட்டினருக்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பு இருப்பது அண்மையில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
தெலுங்கானாவில் இருக்கும் ஹைதராபாத் பல்கலைக்கழகம், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் உடல்நலம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. 2023 ஜூலை மாதத்திற்கும் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், அத்துறையைச் சேர்ந்த 345 ஊழியர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 80 விழுக்காட்டினருக்குக் கல்லீரல் கொழுப்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், நீரிழிவு, இதயக் கோளாறு, சீறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
எனவே, சர்க்கரை அதிகம் உள்ள பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதுடன் அதிக தண்ணீர் குடிக்க வேண்டுமென்றும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவித்தது.