புதுடெல்லி: யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து ராணுவம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இங்கு நடைபெறும் பெரும்பாலான வன்முறைச் சம்பவங்களுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திரா திவிவேதி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆண்டுதோறும் ராணுவ தினத்தன்று நடத்தப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக பாகிஸ்தான் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
“கடந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானைச் சேர்ந்த 60 விழுக்காடு பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளில் 80 விழுக்காட்டினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
“ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் 60% மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு உள்ளூர் மக்கள் அமைதியுடன் செல்ல விரும்புவதே முக்கிய காரணம். காஷ்மீர் மக்கள் வன்முறையை விட்டு தொலைதூரம் விலகியிருக்க விரும்புகின்றனர்.
“ஆனால், வன்முறையானது நமது மேற்கத்திய பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தானால் கட்டவிழ்த்து விடப்படுகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய, சீன எல்லைப் பகுதியில் உள்ள துருப்புகளைக் குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
“எல்லையில் அமைதி நிலவ இரு தரப்பு நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டியது அவசியம். தற்போது 3,488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைப்பகுதியில் ஸ்திரமாகவும், அதே சமயம் உணர்வுபூர்வமாகவும் இருப்பதாக தலைமைத் தளபதி மேலும் கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளாக இந்திய சீன எல்லைக் கோட்டு பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது.