மும்பை: பாகிஸ்தானிலிருந்து 28 கொள்கலன்களில் கொண்டுவரப்பட 800 டன் ஒப்பனைப் பொருள்களையும் உலர் பேரீச்சம்பழங்களையும் மும்பை நவ சேவா துறைமுகத்தில் இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) கைப்பற்றியதாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவற்றின் மதிப்பு ரூ.12 கோடி (S$1.775 மில்லியன்) எனத் தெரிவிக்கப்பட்டது.
‘ஆப்பரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்’ எனும் சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 2025 மே 2ஆம் தேதிமுதல் பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருள்களை இறக்குமதி செய்ய இந்தியா முழுமையாகத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இறக்குமதியாளர்கள் மூவர் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட அப்பொருள்களை இறக்குமதி செய்தது அப்பட்டமான விதிமீறல் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவையனைத்தும் துபாயின் ஜெபெல் அலி துறைமுகம் வழியாகக் கொண்டுவரப்பட்டதாகவும் அவை துபாயை மையமாகக் கொண்டதாகவும் தவறான தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆயினும், அவை பாகிஸ்தானைச் சேர்ந்தவை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
உலர் பேரீச்சம்பழங்கள் தொடர்பில், போலியான விலைப்பட்டியல்களை வழங்கிய, துபாயைத் தளமாகக் கொண்ட விநியோகிப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அதுபோல, ஒப்பனைப் பொருள்கள் தொடர்பில் சுங்க முகவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானியர் ஒருவர், இந்தியர் ஒருவர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைச் (யுஏஇ) சேர்ந்த சிலர் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் ‘ஆப்பரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அம்மாதத்தில், ரூ.9 கோடி மதிப்புள்ள 1,115 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவை 39 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கள்ள இறக்குமதி தொடர்பில் இறக்குமதியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இறக்குமதியாளர்கள் சிலர் பொய்யான தகவல்களை அளித்து, போலியான ஆவணங்களை உருவாக்கி கள்ளத்தனமாக இறக்குமதி செய்ய முயல்வதாகக் கூறப்படுகிறது.

