புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், டெல்லி அரசுக்கும் காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவர்களில் 191 பேர் சிறுவர், சிறுமியர், 616 பேர் பெரியவர்கள்.
இவர்களில் 235 பேரை மட்டுமே காவல்துறையினர் மீட்டுள்ளனர். எஞ்சிய 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் கவலையளிக்கக்கூடிய ஒரு தீவிரமான பிரச்சினையாகும்.
“மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது.
“இது மனித உரிமை மீறலின் உச்சம்,” என மனித உரிமைகள் ஆணையம் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த விவகாரம் குறித்து டெல்லி மாநில தலைமைச் செயலாளர், டெல்லி காவல் ஆணையர் ஆகியோர் விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிர்ச்சியூட்டும் 2025 புள்ளிவிவரம்
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெளியான தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் மட்டும் டெல்லியில் மொத்தம் 24,508 பேர் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 60 விழுக்காட்டினர் பெண்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது.
கடந்த ஆண்டில் காணாமல் போனவர்களில் 15,421 பேர் மீட்கப்பட்டாலும், 9,087 பேர் என்ன ஆனார்கள் என இன்னும் தெரியவில்லை என மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

