இந்தியாவில் 82% கிராமப்புறக் குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

இந்தியாவில் 82% கிராமப்புறக் குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

2 mins read
597f026f-58af-421d-abdc-c3e2dd296ebb
கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஜல் ஜீவன்’ திட்டம், முழு இலக்கை எட்டும் வகையில் எதிர்வரும் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்தியாவில் குழாய் மூலம் குடிநீர் வசதி பெறும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை 15.84 கோடியாக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஏறக்குறைய 82 விழுக்காட்டுக் குடும்பங்கள் குடிநீர்க் குழாய் இணைப்பு பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றில் இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அனைத்துக் கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான, போதுமான குடிநீரை, குழாய் மூலம் வழங்குவதை உறுதிசெய்ய ‘ஜல் ஜீவன்’ திட்டம் தொடங்கப்பட்டது.

குறிப்பிட்ட இலக்குடன் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தத் திட்டம், முழு இலக்கை எட்டும் வகையில் எதிர்வரும் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள 19.35 கோடி கிராமப்புறக் குடும்பங்களில், இதுவரை 15.83 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் ஏறக்குறைய 82 விழுக்காடு ஆகும்.

கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது என்றும் ‘ஹர் கர் ஜல்’ எனப்படும் ஒவ்வொரு வீட்டிலும் குழாய் நீர் என்ற பிரசாரத்தின்கீழ், 2.77 லட்சம் கிராமங்கள், 100 விழுக்காடு குழாய் வழிக் குடிநீர் வசதியை எட்டியுள்ளன என்றும் அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2019ல் குழாய் வழிக் குடிநீர் வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை, 23.62 லட்சமாக இருந்த நிலையில், கடந்த மாத நிலவரப்படி அந்த எண்ணிக்கை 2.20 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2019ல் குழாய் வழிக் குடிநீர் இணைப்பு கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 29,711ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை, 9.23 லட்சமாக அதிகரித்துள்ளது.

“மேலும், கிராம ஊராட்சிகள், சமூகச் சுகாதார மையங்களில் குழாய் வழிக் குடிநீர் இணைப்பு வசதி 3.93 லட்சம் நிறுவனங்களைச் சென்றடைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பது அதிகரித்துள்ளதால், நீரின் மூலம் பரவும் நோய்கள் குறைந்துள்ளன,”என்று இந்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்