கொச்சி: கடந்த ஏழு ஆண்டுகளில் கேரளக் காட்டுப் பகுதிகளில் 827 யானைகள் உயிரிழந்துவிட்டதாக அம்மாநில வனத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டதும் சில தொல்லைகளுக்கு ஆளாகி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் யானைகள் கொல்லப்படாமல் இருக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. மனிதத் தாக்குதல், மின்வேலியில் சிக்கி இறப்பது, ரயில் மோதி பலியாவது, பூச்சிக்கொல்லி தடவப்பட்ட அன்னாசிப் பழங்களைத் தின்று உயிரிழப்பது எனப் பல்வேறு காரணங்களால் யானைகளை இழக்க நேரிடுகிறது.
எனினும், பெரும்பாலான யானைகள் இயற்கையான காரணங்களால் இறப்பது ஆறுதல் தரும் தகவல்.
கடந்த 2019ஆம் ஆண்டு, மனிதத் தாக்குதல், தொந்தரவுக்கு ஆளாகி 12 யானைகள் இறந்த நிலையில், இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ஆம் ஆண்டு 18ஆக அதிகரித்துவிட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

