புதுடெல்லி: இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வுக்கு ஊக்கமாக அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யைத் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.
இதனால் நாட்டுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இத்தகைய செலவுகளைக் குறைக்க, இந்தியாவிலேயே இயற்கை எரிவாயு வளங்கள் இருக்கிறதா என்ற தேடலில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, ‘ஆழ்கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு இருப்பை கண்டறிய வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், அந்தமான் தீவுகளில் ஸ்ரீ விஜயபுரம் - 2 எண்ணெய்க் கிணறு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே 17 கி.மீ. தொலைவில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து “அந்தமான் கடல், நமக்கு ஏராளமான எரிசக்தி ஆற்றலை அள்ளி தந்திருக்கிறது,” என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“அந்தமான் கடல் பகுதியில், 7,257 மற்றும் 7,382 அடி ஆழத்தில் ஆரம்பக்கட்ட உற்பத்தி பரிசோதனை நடத்தப்பட்டதில் அங்கு இயற்கை எரிவாயு கொட்டிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எரிவாயு மாதிரிகள் கப்பல் மூலம் ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு எடுத்து வந்து பரிசோதிக்கப்பட்டதில், 87 % அளவுக்கு மீத்தேன் இருப்பது உறுதியாகி உள்ளது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இயற்கை எரிவாயு கடலில் எவ்வளவு ஆழத்தில் கொட்டிக்கிடக்கின்றன, வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு பலன் தருமா என்பது அடுத்து வரும் மாதங்களில் உறுதி செய்யப்படும். நமது தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு இது மிக முக்கியமான மைல் கல்,” என்று திரு ஹர்தீப் சிங் குறிப்பிட்டார்.