88,000 சுவடிகள் மின்னிலக்கமயம்

88,000 சுவடிகள் மின்னிலக்கமயம்

2 mins read
ed86b609-7cc0-418b-a2f3-4eda3038ced5
திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ரூ.491 கோடி நிதியும் உடனுக்குடன் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. - சித்திரிப்புப் படம்: இந்து தமிழ் திசை

சென்னை: பழைய ஓலைச்சுவடிகளில் உள்ள தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் ‘ஞான பாரதம்’ என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 88,000 சுவடிகள் மின்னிலக்க மயமாக்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஓலைச்சுவடிகள், மரப்பட்டைகள், கையால் தயாரிக்கப்பட்ட காகிதங்கள், துணிகளில் எழுதப்பட்ட பழங்கால கையெழுத்துப் பிரதிகள் கண்டெக்கப்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் பாதுகாப்பாகச் சேகரித்து மின்னிலக்க முறையில் தொகுத்து வருகிறது கலாசார அமைச்சு.

இந்த அரிய சுவடிகளில் உள்ள தகவல்களை இணையம்வழி பகிர்ந்துகொள்ளும் பொருட்டு கடந்தாண்டு ‘ஞான பாரதம்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், திட்டப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.491 கோடி நிதியும் உடனுக்குடன் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, பெங்களூரில் உள்ள இந்தியத் தொல்லியல், கல்வெட்டியல் துறை பணிகளை வேகப்படுத்தியது.

அதன் பலனாக, நவீன ஸ்கேனர் கருவி மூலம் இதுவரை 88,820 ஆவணங்கள் மின்னிலக்க மயமாக்கப்பட்டு ஞானபாரதம்.காம் என்ற இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள் 83,045 காகிதச்சுவடிகள், 5,772 பனை ஓலைகள், மூன்று மரப்பட்டைகள் ஆகியவை அடங்கும்.

இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள சுவடிகளில் காணப்படும் மொழி, எழுத்து, அவற்றின் வடிவம், காலம், பின்னணி ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ், சமஸ்கிருத மொழிகளிலுள்ள சுவடிகள்தான் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிராகிருதம், பாரசீக மொழிகளிலும் கணிசமான மொழி ஆவணங்கள் ஞான பாரதம் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர்.

தமிழில் சித்த மருத்துவம், வர்மக்கலை, சங்க இலக்கிய, இலக்கணம், சமய நூல்கள், கோவில் கட்டடக்கலை, வழிபாட்டு முறைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சோழர், பாண்டியர் கால கோவில் வரலாறுகள், ஜோதிடம், வானியல் கணிதம் ஆகிய தலைப்புகளிலும் பயனுள்ள தகவல்களைப் பெற முடியும்.

குறிப்புச் சொற்கள்