மகாராஷ்டிர மகளிர் உதவித் தொகை திட்டம்: 92 லட்சம் பயனாளிகள் நீக்கம்

மகாராஷ்டிர மகளிர் உதவித் தொகை திட்டம்: 92 லட்சம் பயனாளிகள் நீக்கம்

1 mins read
c61e5d17-57d3-45d3-b720-cdff90dbaee6
பணிபுரியும் பெண்கள். - படம்: பிக்சாபே

மும்பை: மகாராஷ்டிர அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஏறக்குறைய 92 லட்சம் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின்கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், பயனாளிகளின் விவரங்களை ‘இ-கேஒய்சி’ (e-KYC) முறையில் சரிபார்க்க அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கான காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மொத்தமுள்ள 2.4 கோடி பயனாளிகளில் சுமார் 38 விழுக்காட்டினர் பல்வேறு காரணங்களுக்காகத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக, கடந்த 8 மாதங்களாகியும் ‘இ-கேஒய்சி’ சரிபார்ப்பு நடைமுறையை நிறைவு செய்யத் தவறிய 50 முதல் 55 லட்சம் பெண்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்ட 12 லட்சம் பெண்களும் திட்டத்திற்கான அதிகபட்ச வயதான 65ஐ கடந்த 4.5 லட்சம் பெண்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர, ‘நமோ ஷேத்காரி யோஜனா’ திட்டத்தின்மூலம் ஏற்கெனவே நிதியுதவி பெற்று வந்த 5 லட்சம் பெண்களும் இத்திட்டத்தின்கீழ் தவறான முறையில் பயனடைந்து வந்த 14,000 ஆண்களும் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இத்திட்டத்தில் தவறுதலாக நீக்கப்பட்டவர்கள் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மறுசரிபார்ப்பு நடைமுறைக்குப் பின்னரே பயனாளிகளின் இறுதி எண்ணிக்கை வெளியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மாநில அரசுஉதவித்தொகைஇந்தியப் பெண்கள்மகாராஷ்டிரா