சென்னை: சென்னையைச் சேர்ந்த எண்ணூர் அனல் மின்நிலையக் கட்டுமானத் தளத்தில் நடந்த விபத்தில் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாகச் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்உற்பத்தி, விநியோக நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த நிலையத்தில் எஃகு வளைவு ஒன்று இடிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாக நிறுவனத்தின் தலைவரும் தமிழ்நாடு மின்வாரியச் செயலாளருமான டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும் ஓர் ஊழியர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தக் கட்டுமானத் திட்டத்தின் குத்தகைதாரரான ‘பாரத் ஹெவி எலெக்டிரிக்கல்ஸ்’ நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருப்பதாக டாக்டர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
ஊழியர்களின் உயிரிழப்பைத் தமது எக்ஸ் தளப் பதிவு மூலம் உறுதிசெய்த மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்ட ஊழியர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், மாண்டோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மேலும், “மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மின்வாரியத் தலைவர் ஜே. ராதாகிருஷ்ணன் இருவரையும் நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
“உயிரிழந்தோரை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்,” என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் தளப் பதிவில் இந்த விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தமடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல்மின் நிலையக் கட்டுமானப் பணியில் 3,000க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கட்டுமானப் பணி தற்போது கிட்டத்தட்ட 70 விழுக்காடு நிறைவுபெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலையத்தின் முகப்புப் பகுதியைக் கட்டமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை மாலை, வடமாநில ஊழியர்கள் ஏறத்தாழ 30 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரும்புக் கம்பிகளால் ஆன முகப்புப் பகுதியில் உள்ள சாரம் திடீரெனச் சரிந்து விழுந்தது. இதில், படுகாயமடைந்த பலரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றவர்கள் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.