ராமேசுவரம்: தமிழகம், காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் படகு ஓட்டுநர்கள் மூவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடற்பகுதியில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தியா ஜோசப் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
படகில் இருந்த மீனவர்கள் அமோஸ்டின், ஜெனிடாஸ், ஜெபஸ்டின் ஆகியோரைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், கடந்த 2ஆம் தேதி காரைக்கால் மீனவர்களின் 2 படகுகளைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், 11 மீனவர்களைக் கைது செய்தனர். அவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த மீனவர்களின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 12 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், 12 மீனவர்களில் 9 மீனவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தார்.
அதேநேரத்தில், படகுகளின் ஓட்டுநர்களாக இருந்த 3 மீனவர்களுக்கும் தலா 6 மாதம் சிறைத் தண்டனையும் இந்திய மதிப்பில் ரூ.34 லட்சத்து 83 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

