ஐந்தாண்டுகளில் 900 கார் இயந்திரங்கள் திருட்டு

1 mins read
8a0e2bed-36ab-4532-aa08-5447b7dd4133
இந்தியாவின் ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்திலுள்ள பெனுகொண்டாவில் கியா கார் தயாரிப்பு ஆலையிலிருந்து கார் இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளன. - மாதிரிப்படம்: ராய்ட்டர்ஸ்

அமராவதி: முன்னணி தென்கொரிய கார் நிறுவனங்களில் ஒன்றான ‘கியா’ (KIA) தயாரிப்பு ஆலையிலிருந்து 900 இயந்திரங்கள் மாயமாகியுள்ளன.

இந்தியாவின் ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்திலுள்ள பெனுகொண்டாவில் கியா கார் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.

அங்கிருந்து கார் இயந்திரங்களைத் திருடுவது ஐந்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும் எனக் காவல்துறை நம்புகிறது. இதுகுறித்து மார்ச் 19ஆம் தேதி அந்நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்தது.

“கார் இயந்திரத் திருட்டு கடந்த 2020ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக அக்குற்றம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கவுள்ளோம்,” என்று பெனுகொண்டா துணை வட்டாரக் காவல்துறை அதிகாரி வெங்கடேஸ்வரலு ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் 900 இயந்திரங்கள் மாயமாகியுள்ளதை அவர் உறுதிசெய்தார். அந்த ஆலைக்குக் கொண்டுவரப்பட்ட வழியிலும் ஆலையிலிருந்தும் அவை திருடப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

இந்தத் திருட்டு ஆலையிலிருப்போர் மூலமே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று காவல்துறை கருதுகிறது. அதனையடுத்து, அந்த ஆலையின் முன்னாள், இந்நாள் ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது.

“வெளியாள்கள் மூலமாக திருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், சிறுதுரும்பையும் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளியில் எடுத்துச் செல்ல முடியாது,” என்று திரு வெங்கடேஸ்வரலு கூறினார்.

இத்திருட்டு குறித்து மேலும் விசாரிக்க காவல்துறைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்பில் பல்வேறு ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்