தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மாரிலிருந்து 900 போராளிகள் ஊடுருவல்: விழிப்புநிலையில் மணிப்பூர் மாநிலம்

2 mins read
03e56f6f-f3b0-4f8b-9e0f-5ce8ea05eebf
செப்டம்பர் 10ஆம் தேதி ஊரடங்கு உத்தரவையும் மீறி கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசுகின்றனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரிலிருந்து 900 போராளிகள் மணிப்பூர் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் பாதுகாப்புப் படையினர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மணிப்பூரில் பெரும்பான்மை இந்துக்களான மெய்தேய் சமூகத்தினருக்கும் முக்கியமாக கிறிஸ்துவ பழங்குடி சமூகத்திற்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது.

மலைப் பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடி மக்கள், மியன்மாரில் உள்ள பழங்குடி மக்களுடன் கலாசார, குடும்ப, மத உறவுகளைக் கொண்டுள்ளனர். அங்கு 2021இல் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து 12க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் ராணுவத்திற்கு எதிராக போரிட்டு வருகின்றன.

மணிப்பூர் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆலோசகரான குல்தீப் சிங், போராளிகள் சந்தேகத்திற்கிடமாக எல்லையைக் கடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து உள்ளூர் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை செப்டம்பர் 20ஆம் தேதி உறுதிப்படுத்தினார்.

மதிப்பீட்டின்படி “900 பேர் வருகின்றனர்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எல்லைப் பகுதி “விழிப்பில்” வைக்கப்பட்டுள்ளதாகவும், தொலைதூர, கரடுமுரடான பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் திரு சிங் கூறினார்.

மணிப்பூரில் ஊடுருவுபவர்கள், காடுகளில் பயிற்சி பெற்ற குக்கி போாராளிகள் என்றும் ஆயுதம் ஏந்திய வானூர்திகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அனுமதியற்ற வானூர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திரு சிங் மேலும் தெரிவித்தார்.

பல மாத அமைதிக்குப் பிறகு, செப்டம்பரில் மணிப்பூரில் கிளர்ச்சிக் குழுக்கள் ஏவுகணைகளால் தாக்கி, வானூர்திகள் மூலம் குண்டுகளை வீசியதால் புதிய மோதல் வெடித்தது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.

கடந்த வாரம் மெய்தேய் ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் இம்பாலுக்கு ஊர்வலமாகச் சென்று அண்மைய தாக்குதலுக்கு காரணமான குக்கி கிளர்ச்சிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்